என் கவிதைகள் ?
கவிதைகள் என்று கர்வபட்டுக்கொள்ளும் இலக்கிய அறிவு இல்லை. அப்படிச் சொல்லத் தேவையான தகுதி பற்றிய படிப்பும் கிடையாது. தமிழும் தடுமாறும். காசுக்கு கோலிக் குண்டும், கள்ளன் போலிசும், கம்பு தள்ளியும், பம்பரமும் விளையாடிக் காலந்தள்ளும் பள்ளிக்கூடப் பருவத்தில் என்னை அடையாளப்படுத்திக் கொள்ள, அவஸ்தைப் பட்ட அந்தத் தருணங்களில், அத்தியாவசியமான அரவணைப்பும் , திட்டமிட்ட வழிகாட்டலும் , இலக்குத் தெரிந்த பயணமும் இல்லாத, தொலைக்காட்சியும் தொலைவில் இருந்த ,படம் பார்க்கும் பழக்கமில்லாத அந்தப் புழுக்கத்தில் எட்டாக்கனி என எல்லாமும் இருந்த ஒரு வெம்மையில் சிக்கி இந்தப் பழம் புளிக்கும் என புறம் தள்ள முடியாத வெளிப்புற உலகின் தாக்கத்தில் தகித்து தட்டுத் தடுமாறிய என் உணர்வுக்கு உடனிருக்கும் உற்ற நட்பில்லாத் தனிமையில் சிந்திய சிந்தனை சிதறல்களின் வார்த்தை வடிவங்கள் இவை. சிந்தனையைச் சீர்பிரித்துப் பாவாக்கித் தலைப்புகளுக்குத் தலையை உடைக்காமல் தான் தோன்றித் தனமாய் தடித்தனமாய் உணர்வுப் பெருக்கத்தின் வடிகாலாய் ஜிப்பரிஸ் தியானமாய் எழுதப்பட்டவை. எண்ணிக்கைக்காக எழுதியவை அல்ல இவை. எழுத முடிந்ததும் இல்லை. அவ்வாறு பகிரிந்து கொள்ளப் பக்கத்தில் படித்தவர்கள் இல்லை. படித்தவர்கள் பக்கம் இருக்கும் பாதையும் தெரியவில்லை. பத்திரப் படுத்தியதை பறித்துப் படித்தவர்கள் பாராட்டாய்ச் சொன்ன பொழுது பாட்டெழுதப் பலர் பாட்டுக்களைப் படித்து பள்ளிக்குடப் பாடப் புத்தகங்களில் மீண்டும் பழைய நேர் நேர் தேமா எனப் படித்துப் பயந்து பாதியிலேயே விட்டு, பலமுறை நப்பாசையாய் பத்திரிக்கைகளுக்கு அனுப்பி அடுத்த இதழ் பற்றிய அக்கறையில்லாமல் அர்த்தராத்திரியில் அரைகுறைத் தூக்கத்தில் அன்றைய தினத்தின் கனம் குறைக்க சொறிந்து கொண்ட குரங்குப் புண்ணாய், பலவீனத்தால் வெளிப்பாடுகளை வெட்ட வெளியில் கொட்ட முடிய கையாலாகாத்தனத்தால் பயிற்சி செய்யும் பத்தியமும் படியாமல் வழிப்படுத்த வகை தெரியாத வயதுக் கோளாறுகளின் வடிகாலாய் வடிந்தவைகளைக் கவிதைகள் என்று சொல்லாமல் கதறல்கள் என்று சொல்லலாம். கவிதைகள் என்று சொல்வது அடையாளத்தின் பொருட்டே . எனவே அந்தக் கேள்விக்குறி.
பா படிக்காமல்
சீர் பிரிக்காமல்
சிந்திடும் இவை
என்
சிந்தனைச் சிதறல்கள்
நீர்
சிரிக்காமல் சீர்தூக்கி
சிறப்பு செய்திட
செழித்திடுவேன் யான்
சீரும் சிறப்புமாய்.
கட்டிமுத்து.
No comments:
Post a Comment